சென்னையில் ஜேஇஇ. அட்வான்ஸ்டு தேர்வு பயிற்சி: நாமக்கல் மாணவர்கள் 15 பேர் அனுப்பிவைப்பு

பைல் படம்.
நாமக்கல்லைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவ மாணவிகள் 15 பேர், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கான 45 நாட்கள் பயிற்சிக்கு, சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான ஐஐடி, எம்ஐடி, என்ஐடி போன்ற இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேருவதற்காக, ஜேஇஇ தேர்வுகள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், கடந்த, ஜனவரியில், ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வு எழுதினர்.
அதில் பெற்ற மதிப்பெண் மூலம், 7 மாணவர்கள், 6 மாணவியர், 2 மாற்றுத்திறனாளிகள் என, மொத்தம், 15 பேர் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு, ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சி முகாம், சென்னை செங்கங்கப்பட்டு சிறுசேரியில் உள்ள பயிற்சி மையத்தில், 45 நாட்கள் நடக்கிறது.
இப்பயிற்சியில், மாணவர்களுக்கு இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுக்கு தயார்படுத்தப்படுகின்றனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, தனி பஸ்சில் வழியனுப்பி வைக்கப்பட்டனர். முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர், மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தனர்.
சென்னை சென்ற பஸ்சில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த, 11 பேர், நாமக்கல் மாவட்டத்தில் 15 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் 11 பேர் என, மொத்தம் 37 அரசு பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளி மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu