நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்

நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்
X

கருங்கரட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வாடி வாசல் வழியாக வந்த காளையை மாடுபிடி வீரர் ஒருவர் தாவிப்பிடித்து அடக்கினார்.

நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. காளைகள் முட்டியதில் 25 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்

போடிநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 25 மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் அடுத்த போடிநாயக்கன்பட்டி ஊராட்சி கருங்கரட்டில், அலங்காநத்தம் கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள், மருத்துவ பரிசோதனைக்குப் பின் வாடி வாசல் வழியாக திறந்து விடப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை தனித்தனி குழுக்களாக களத்தில் இருந்த மாடுபிடி வீரர்கள் தாவிப் பிடித்து அடக்க முற்பட்டனர்.

சில காளைகள் மாடு வீரர்களை மிரட்டிச் சென்றன. மிரட்டிய சில காளைகளை மாடுபிடி வீரர்கள் விடாமல் துரத்தி மடக்கிப் பிடித்தனர். இதில் சிறந்த காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் விழாக் குழுவினர் சார்பில் ட்ரெஸ்ஸிங்க் டேபிள், குக்கர், மிக்ஸி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டி வீசியெறிந்ததில் 25 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் 350 காளைகள் மற்றும் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திரளான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து பார்த்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!