நாமக்கல் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் தூசூர் ஏரிக்கு பாதிப்பு?
தூசூர் ஏரியின் தோற்றம் (பைல் படம்)
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்காத கழிவு நீரால், தூசூர் ஏரி மாசடைந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரி, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தூசூரில் அமைந்துள்ளது. மழை காலங்களில், கொல்லிமலையில் இருந்து வரும் தண்ணீரால் இந்த ஏரி நிரம்பும். பின்னர் இந்த ஏரியில் இருந்து வழிந்தோடும் நீர் வளையப்பட்டி, அரூர், ஆண்டாபுரம் வழியாக காட்டுப்புத்தூர் அருகே காவிரியில் கலக்கும். இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக, நாமக்கல் நகராட்சி கழிவு நீர் கலந்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். தூசூர் ஏரி மாசடைந்து சுமார் 250 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
ஏரியில் நகராட்சி கழிவுநீர் கலப்பதை தடை செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையொட்டி மாவட்ட கலெக்டர், தூசூர் ஏரி தண்ணீர் மாசடைந்து வருவதாற்கான காரங்கள் குறித்து ஆய்வு செய்ய மாசுகாட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரகுநாதன் தலைமையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கொண்ட குழுவை அமைத்தார். அந்த குழுவினர் கடந்த மாதம் 18ம் தேதி, ஏரி பகுதியில் 8 இடங்களில் தண்ணீரை ஆய்விற்கு எடுத்து அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின் முடிவில், தூசூர் ஏரி மாசடைவதற்கு நாமக்கல் நகராட்சியின் ஒரு பகுதி கழிவு நீர் சுத்திகரிக்காமல் அப்படியே வெளியெற்றப்படுவது தான் காரணம் என தெரியவந்துள்ளது.
நாமக்கல் நகாட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இரண்டாகப் பிரிந்து கொசவம்பட்டி குட்டைக்கு வருகிறது. இதில், தூறையூர் ரோட்டில் இருந்து செல்லும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லாமல் அப்படியே வெளியேற்றப்படுவதால், ஒரு பகுதி கழிவு நீர் தூசூர் ஏரியில் கலந்து, ஏரி முழுவதும் பாதிக்கப்பட காரணமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, நாமக்கல் நகராட்சியின் ஒரு பகுதி கழிவு நீர் சுத்திகரித்து சென்றாலும், மற்றொரு பகுதி கழிவு நீர் சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றப்பட்டு தூசூர் ஏரியில் கலப்பதால் ஏரி நீர் பாதிக்கப்படுகிறது என கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu