நாமக்கல்லில் 7ம் தேதி கைத்தறி கண்காட்சி, மருத்துவ முகாம்

பைல் படம்
வருகின்ற 7ம் தேதி தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கண்காட்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
வருகின்ற ஆக. 7ம் தேதி 10-வது தேசிய கைத்தறி தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சூரியம்பாளையம், செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து திருமண மண்டபத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
கைத்தறி கண்காட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துணி ரகங்களான ராசிபுரம் பட்டு சேலைகள், இளம்பிள்ளை மற்றும் ஆர்.புதுப்பாளையம் காட்டன் சேலைகள் மற்றும் காட்டன் கோர்வை சேலைகள், கைத்தறி வேஷ்டி ரகங்கள், கைத்தறி துண்டுகள், பவானி ஜமுக்காளம், பெட்சீட்கள் மற்றும் கால்மிதி (மேட்) ஆகிய ரகங்கள், அரசு தள்ளுபடி மான்யத்துடன் விற்பனை செய்யப்படவுள்ளது.
சூரியம்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும், நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் கண் சிகிச்சை ஆகிய பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
கைத்தறி துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுறவு அமைப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு சாராத கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய மாநில அரசால் வழங்கப்படும் நல்வாழ்வுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் அனைவரும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu