நாமக்கல் அருகே பட்டப்பகலில் ரூ. 8 லட்சம் மதிப்பு தங்க நகை, பணம் திருட்டு

நாமக்கல் அருகே பட்டப்பகலில்  ரூ. 8 லட்சம் மதிப்பு தங்க நகை, பணம் திருட்டு
X

பைல் படம்

நாமக்கல் அருகே பட்டப்பகலில் ரூ. 8 லட்சம் மதிப்பு தங்க நகை, பணம் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அருகே விவசாயி வீட்டில், பகல் நேரத்தில், ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கப்பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகில் உள்ள, அக்கலாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஷ் (42), விவசாயி. நேற்று காலை அமாவாசையை முன்னிட்டு, இவர் தனது குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர், மீண்டும் மாலை 4 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்புற கதவில் இருந்த, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

பரமத்திவேலூர் போலீஸ் டிஎஸ்பி ராஜமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையினர் பார்வையிட்டனர். அப்போது இருவர் முகமூடி அணிந்தபடி வந்து திருடுவது பதிவாகியிருந்தது. அதனை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள், கை ரேகை பதிவு செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பகல் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story