பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: பைனான்ஸ் அதிபர் கொலை, 4 பேர் கைது
காட்சிப்படம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் குமரிபாளையம், தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (47), அவரது மனைவி சத்யா (37), அவர்களுக்கு கவுதம் (18), நந்தகுமார் (16), ஆகிய இரண்டு மகன்கள் உள்ளன. சரவணன் நாமக்கல் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக பைனான்ஸ் நிறுவனம் வைத்து வட்டிக்கு பணம் வட்டிக்கு கொடுத்து வருகிறார். அவர் நாமக்கல் பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் பைனான்ஸ் நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வட்டிக்கு வாங்கி, அதையும் வட்டிக்கு விட்டு, கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரத்தின் மகன் நாகராஜ் (36), என்பவரிடம்ரூ. 20 லட்சம் பணத்தை பெற்று கொண்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், தனது நண்பர்களான காவேட்டிபட்டியை சேர்ந்த வினோத் (37), நாமக்கல் மேட்டுதெருவை சேர்ந்த கவின்குமார் (23), நடராஜபுரத்தை சேர்ந்த ஜோசப் (22) ஆகிய நான்கு பேரும் கடந்த 3ம் தேதி சரவணனை காரில் கடத்திச் சென்று கொல்லிமலை செம்மேடு பகுதியில் உள்ள தனியார் லாட்ஜியில் அடைத்து வைத்து, கடுமையாக துன்புறுத்தி பணத்தை கேட்டுள்ளனர். பணத்தை கொடுக்காததால் பின்னர் அவரை கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சரவணன் தனியார் லாட்ஜில் உயிரிழந்து கிடைப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து கிருஷ்ணகுமார் வாழவந்தி நாடு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வாழவந்திநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட பைனான்சியர் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் சரவணனின் உடலை வாங்க மறுத்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல்லில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, கொலை சம்பவத்தில் நாகராஜ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்வதாக அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்றுக்கொண்டனர்.
இது குறித்து, கொல்லிமலை வாழவந்திநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நாகராஜ், வினோத், கவின்குமார், ஜோசப் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்தை கேட்டு அடியாட்கள் மூலம், பைனான்ஸ் அதிபரை கடத்தி கொலை செய்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu