ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை அருவிகளில் குளிக்க வனத்துறை தடை

கொல்லிமலையில் உள்ள ஆகாச கங்கை அருவி (பைல் படம்)
பாதுகாப்பு கருதி, ஆடிப்பெருக்கு நாளில், கொல்லிமலை நீர் வீழ்ச்சிகளில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
நாமக்கல் கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1,330 மீட்டர் உயரத்தில் அமைந்து, சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. மூலிகை வளம் நிறைந்த கொல்லிமலைக்கு இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு குழாம், காõட்சி முனையம், அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடும் சுற்றுலாப்பயணிகள் மூலிகை மணம் நிறைந்த ஆகாச கங்கை, மாசிலா அருவி, நம்ம அருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்வது வழக்கம்.
கொல்லிமலையில் உள்ள புராண சிறப்பு பெற்ற அறப்பளீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18ம் பெருக்கு விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் கடந்த 1ம் தேதி துவங்கி விழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வாக ஆடி 18ம் தேதி சனிக்கிழமை அன்று ஏராளமான மலைவாழ் மக்களும், பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும், அருவிகளில் புனித நீராடி அறப்பளீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம், மேலும், தமிழக அரசின் சார்பில் கொல்லிமலையில் ஆக. 2 மற்றும் 3ம் தேதிகளில் வல்வில் ஓரி விழா, மலர்க்கண்காட்சி மற்றும் அரசுத் துறைகளின் பணி விளக்க கண்காட்சி நடைபெறுகிறது. மேலும் 3ம் தேதி சனிக்கிழமை விழாவுக்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலையில் கூடுவார்கள்.
இதையொட்டி, பொதுமக்களின் நலன் கருதியும், பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கொல்லிமலையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆகாச கங்கை அருவி மற்றும் மாசிலா அருவி பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட வன அலுவலர் கலாநிதி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu