நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் விவசாயிகள் மண் வள அட்டை பெறலாம்: ஆட்சியர்

பைல் படம்
நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் இதுவரை 103 முகாம்கள் நடத்தி 2,432 மண்மாதிரிகள், 424 நீர் மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் இந்த வாகனம் மூலம் பரிசோதனை செய்து மண்வள அட்டை பெறலாம்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்செங்கோடு தலைமையிடமாக கொண்டு, வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும், நடமாடும் மண்பரிசோதன நிலைய வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து மண் வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் 2023-24-ம் ஆண்டில் இதுவரை 103 முகாம்கள் மூலமாக 2,432 மண்மாதிரிகளும், 424 நீர் மாதிரிகளும் ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதம் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் சிறப்பு மண்பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
இதன்படி இன்று (மார்ச் 14-ம் தேதி) புதுச்சத்திரம் தாத்தையங்கார்பட்டி கிராமத்தில் மண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வரும் 21ம் தேதி எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியமணலி, 28ம் தேதி மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செண்பகமாதேவி கிராமத்தில் முகாம்கள் நடைபெற உள்ளது.
மேலும், விவசாயிகள் மண்மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகளை நேரடியாக நாமக்கல் வசந்தபுரம் மண் பரிசோதனை நிலையத்திலும், திருச்செங்கோடு நாராயணம்பாளையம் நடமாடும் மண்பரிசோதனை நிலையத்திலும்வழங்கி ஆய்வு செய்து மண்வள அட்டை பெற்று பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu