கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை

கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் போலி  டாக்டர்கள் மீது நடவடிக்கை
X
நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ பேரவை எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற, கால்நடை டாக்டர் மட்டுமே, சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மீறி போலி கால்நடை டாக்டர்கள் சிகிச்சையளிப்பதும், அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல். போலி கால்நடை டாக்டர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது.

மாவட்டத்தில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக கால்நடை டாக்டர் எனக் கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனார். இது முற்றிலும் தவறானது. செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது. எனவே அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவர்கள். எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட பதிவு பெற்ற கால்நடை டாக்டர்களை மட்டுமே பொதுமக்கள் அணுக வேண்டும்.

போலி கால்நடை டாக்டர்கள் குறித்த தகவலை, அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநருக்கு, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். போலி கால்நடை டாக்டர்கள் கண்டறியப்பட்டால் முதல் முறையாக ரூ. 1000, இரண்டாவது முறை ரூபாய் 1000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!