மேட்டூர்-சரபங்கா திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோரிக்கை
மேட்டூர்-சரபங்கா திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோரிக்கை
நாமக்கல்,
மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் மெய்ஞானமூர்த்தி, கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மேட்டூர் அணை நிரம்பி வெளியேற்றப்படும் உபரி நீரை கிழக்கு வாய்க்கால் வழியாக சரபங்கா நநி, திருமணிமுத்தாறு, பொன்னியாறு, கரைபோட்டான் ஆறு மற்றும் அய்யாறு ஆகியவற்றுடன் இணைப்பதன் மூலம், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பலாம். ஏற்கனவே 132 கி.மீ. நீளம், ரூ. 565 கோடி மதிப்பில், சரபங்கா நீரேற்றுத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தை விரிவுப்படுத்தி, சேலத்தில் இருந்து 6 கி.மீ., தூரத்தில், 2,400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியான பனமரத்துப்பட்டி ஏரியில் நீரை நீர் நிரப்ப வேண்டும். அதன் மூலம், பனமரத்துப்பட்டி ஏரியில் இருந்து சேலம், வாழப்பாடி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை நிரப்ப முடியும். இதனால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நீர் ஆதாரங்கள் வழுவடைந்து, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு விவசாயம், குடிநீர் மற்றும் இதர தொழில் துறை தேவைகள் பூர்த்தி அடையும். விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்து, தேவையான நிதியை ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu