நிர்வாகத் திறமையின்மையால் மின்சாரக் கட்டணம் உயர்வு: முன்னாள் அமைச்சர் தங்கமணி
நாமக்கல்லில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழக அரசின் நிர்வாகத்திறமை இன்மையால், பொதுமக்கள் பாதிக்கும் வகையில் தமிழகத்தில் மின்சாரக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ, நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தாமல், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்தது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால், பொதுமக்களின் மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் மாதந்தோறும் மின்சாரம் கணக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தனர். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்து ஓராண்டில் மின்சாரக்கட்டணத்தை உயர்த்துகின்றனர். மேலும் ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்பு என்று அறிவித்துள்ளனர். இதனால் ஒரே வீட்டில் தாய் தந்தை ஒரு பகுதியிலும், மகன் மருமகள் மற்றொரு பகுதியிலும் வசித்து 2 மின் இணைப்பு வைத்திருந்தால் அவை ஒன்றாக்கப்படும். இதன்மூலம் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும். இதன்மூலம் தமிழகத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.
ஒரு மாநிலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்றால், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று, பொதுமக்களின் கருத்தைக் கேட்டுதான் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். தற்போதை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சாரக் கட்டணம் உயர்வுக்கான பட்டியலை அவரே தயார் செய்துகொண்டு ஒழுங்குமுறை வாரியத்திற்கு அனுப்பி வைக்கிறார். .
மத்திய அரசு:
மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசை காரணம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். மத்திய அரசும், வங்கிகளும் நஷ்டத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக அடிக்கடி இதுபோன்ற கடிதம் எழுதுவார்கள். ஆட்சியில் உள்ளவர்கள்தான் அதை சமாளிக்க வேண்டும். மின்வாரியத்தின் கடனை அடைக்க ரூ.13,000 கோடி, மின்வாரியத்திற்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 3,000 கோடிதான் கொடுக்கப்பட்டது. 13,000 கோடி கொடுத்திருந்தால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
சேவைத்துறை:
மின்சாரத்துறை என்பது சேவைத்துறை, மக்களுக்கு சேவைசெய்ய வேண்டியத் துறையில், கட்டணத்தை உயர்த்தி லாபம் பார்க்க கூடாது. இதுபோன்ற அடிப்படை கருத்துக்களை கூட புரிந்துகொள்ளாத மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் கடன் ஏற்படுத்திவிட்டார்கள் அதனால்தான் மின் கட்டணத்தை உயர்த்துகிறோம் என்று கூறுகிறார். அவ்வளவு கடன் இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் நிலையை உணர்ந்த அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மின் கட்டணத்தை உயர்த்தாமல், தடையில்லா மின்சாரம் வழங்கினார். உங்களால் ஏன் முடியவில்லை.
விசைத்தறிகள்:
கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு, தொழில் நடத்துபவர்களும், தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மின் கட்டணத்தை உயர்த்துவது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் விசைத்தறிக் கூடங்களுக்கு மாதம் 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கினோம். திமுக ஆட்சிக்கு வந்தால் 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்தனர். தற்போது 750 யூனிட்ட மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், அதற்கு மேல் ஒரு யூனிட்டிற்கு 70 பைசா உயர்த்தப்படும் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே நாமக்கல், பள்ளிபாளையம், குமாரபாளையம், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பல விசைத்தறிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் இத்தொழில் முழுமையாக நலிவடையும்.
விவசாயம்:
பல நெருக்கடியான நிலையிலும் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஒரே மாதத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விளம்பரம் தேடிக்கொண்டனர். அடிப்படை கட்டமைப்பை அதிகரிக்காமல் மின்சார இணைப்பு வழங்கப்பட்டதால், பல பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரமும், மற்றம் மாவட்டங்களில் 9 மணி நேரமும் விவசாயத்திற்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்:
தமிக அரசின் நிர்வாகத்திறமையின்மையால் கடும் நெருக்கடியான நேரத்தில், பொதுமக்களைப் பற்றி சிந்திக்காமல் முதலில் சொத்து வரியை உயர்த்தினார்கள், தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர், விரைவில் பஸ் கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர். இதனால் திமுகவுக்கு வாக்களித்த பொதுமக்கள் ஆளுங்கட்சி மீது மிகவும் வெறுப்படைந்துள்ளனர். அதிமுக சார்பில் மின்சாரக்கட்டண உயர்வைக் கண்டித்து வருகிற 25ம் தேதி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். வருகிற 2024 பார்லி தேர்தலில் பொதுமக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். அனைத்து இடங்களிலும் அதிமுக அபார வெற்றிபெறும். வருகின்ற காலத்தில் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது.
போலீஸ் சோதணை:
என்னுடைய வீட்டில் வருவாய்த்துறையினரும் போலீசாரும் சோதனை நடத்தினார்கள். அது எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான பழைய வீடு, அதே போல் தறிப்பட்டறையும், கடையும் எங்கள் தாத்தா காலத்தில் இருந்தே நடத்தி வருகிறோம். அதிகாரிகள் அவற்றை அளவீடு செய்து சென்றுள்ளனர். இதை சட்டப்படி நான் கோர்ட்டில் சந்திப்பேன் என்று கூறினார்.
பேட்டியின் போது பரமத்தி வேலூர் எம்எல்ஏ சேகர், நாமக்கல் முன்னாள் எம்எல்ஏபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu