நாமக்கல் பகுதியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள்

நாமக்கல் பகுதியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள்
X

பைல் படம்.

நாமக்கல்லில் அனுமதி இன்றி போஸ்டர்கள் ஒட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்லைச் சேர்ந்த ரவுடி காசி. இவர் ஆம்பூர் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்ததாக, ஆம்பூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, நல்லிபாளையம் வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைத் தடுப்பு சுவரில் முத்துக்குமார் ( 28), அஜித்குமார் (25) ஆகியோர் வால் போஸ்டர்கள் ஒட்டியதாக தெரிகிறது. நகராட்சி அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் உரிய அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக போஸ்டர் ஒட்டியதாக முத்துக்குமார், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் நாமக்கல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேந்தமங்கலம் : சேந்தமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் முதுநிலை கட்டளை நிறைவேற்றுநராக பணியாற்றி வருபவர் ராமசாமி ( 58). இவர் சம்பவத்தன்று, சேந்தமங்கலம் அருகே உள்ள இருளப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மாதேஸ்வரன் என்பவருக்கு மகிளா கோர்ட் உத்தரவின்படி பிடிவாரண்டை வழங்க அவரை தேடிச் சென்றார். அப்போது மாதேஸ்வரன் ராமசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி அவமதித்துள்ளார். மேலும் மாதேஸ்வரனின் மனைவி தாமரைச்செல்வி (33), தந்தை பழனிசாமி ஆகியோரும், கோர்ட் ஊழியரான ராமசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, கோர்ட் ஊழியர் ராமசாமி சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து , லாரி டிரைவர் மாதேஸ்வரனை கைது செய்தனர். அவரது மனைவி, தந்தை ஆகியோரை தேடி வருகின்றனர்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கோபி (32). இவர் தனியாருக்கு சொந்தமான சாஃப்டவேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தற்போது வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (27). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சர்வின் ஆதித்யா என்ற 4 மாத குழந்தை உள்ளது. ஐஸ்வர்யா உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று மாலை, ஐஸ்வர்யா தனது கணவர் கோபியிடம் குழந்தையை கொடுத்து விட்டு கழிவறைக்குச் சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்தபோது ஐஸ்வர்யா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை மீட்டு எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். செல்லும் வழியல் ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐஸ்வர்யாவுக்கும், கோபிக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆவதால், தற்கொலை சம்பவம் குறித்து நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!