கல்விக் கடன் ரூ.4.8 லட்சத்தை தள்ளுபடி செய்ய வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கல்விக் கடன் ரூ.4.8 லட்சத்தை தள்ளுபடி செய்ய வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
X

பைல் படம் 

கல்விக் கடன் ரூ 4,80,559- ஐ தள்ளுபடி செய்ய, வங்கிக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சேலம், சூரமங்கலம் இளையப்ப நகரில் வசித்து வருபவர் இளங்கோ, அவரது மகன் முருகபிரகாஷ் (36). இவர் அமெரிக்காவில் விமான பயிற்சி படிப்பை படிப்பதற்காக, நாமக்கல்லில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில், கடந்த 2007 ஆம் ஆண்டு ரூ. 15 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இதற்கு அவரது தாத்தா பெயரில் உள்ள வீட்டை அடமானமாக கொடுத்து இளங்கோவின் தந்தை ஜாமின் கையொப்பம் செய்துள்ளார்.

படிப்பை முடித்து ஓராண்டு காலத்திற்குப் பிறகு அல்லது வேலை கிடைத்த 6 மாத காலத்திற்கு பிறகு, 120 மாதங்களுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் வீதம் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இதுவரை ரூ 36,50,000 வங்கிக்கு செலுத்தியுள்ளார். வங்கி கூடுதலாக வட்டியை கணக்கிட்டு இன்னும் ரூ. 4,80,559 செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளது. வங்கி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் கடன் வாங்கும் போது இன்சூரன்ஸ் பாலிசிக்காக ரூ 13,005 செலுத்தியுள்ளார்.

ஆனால் வங்கி, இன்சூரன்ஸ் பாலிசியை வங்கி வழங்கவில்லை. வங்கியின் இத்தகைய செயல்கள் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை என கூறி கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ 5,72,272 மற்றும் இழப்பீடாக ரூ 5,00,000 சேர்த்து வழங்க கோரி, கடந்த 2019ம் ஆண்டு, முருகபிரகாஷ், வங்கி மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில், வங்கி 10 ஆண்டுக்கான இன்சூரன்ஸ்காக பணம் பெற்றுக் கொண்டு, 2 ஆண்டுகளில் வங்கி அதனை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. இன்சூரன்ஸ்காக பணம் செலுத்தியவருக்கு அறிவிப்பு தராமல் இன்சூரன்ஸ் பாலிசியை வாபஸ் பெற்றுக் கொண்டதும், இன்சூரன்ஸ் செய்ததற்கான எந்த ஆவணத்தையும் வழங்காததும் வங்கியின் சேவை குறைபாடாகும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வங்கியின் சேவை குறைபாட்டிற்காக கடன் பெற்றவர் செலுத்த வேண்டியதாக கூறப்படும் ரூ 4,80,559ஐ, வங்கி தள்ளுபடி செய்து, வழக்கு தாக்கல் செய்தவர் தரப்பில் அடமானம் வைத்த சொத்துக்களின், அசல் ஆவணங்களை 4 வாரங்களுக்குள் திரும்ப வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!