எருமப்பட்டி பகுதியில் வெள்ள பாதிப்புக்குள்ளான நிலங்களை கலெக்டர் ஆய்வு

எருமப்பட்டி பகுதியில் வெள்ள பாதிப்புக்குள்ளான நிலங்களை கலெக்டர் ஆய்வு
X

எருமப்பட்டி பகுதியில் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய வயல்களை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எருமப்பட்டி பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய வயல்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், அலங்காநத்தம் கிராமம், புதுக்கோட்டை கிராமத்தில் பருத்தி, நிலக்கடலை, சோளம் போன்றவை பயிரிட்டுள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வயல்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், வருவாய்த்துறையின் ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை பார்வையிட்டு, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூக இடைவெளியுடன் அரசு கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படுவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் வருகை பதிவேட்டை அவர் பார்வையிட்டார்.

பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களின் பெற்றோரிடம் உயர் கல்வியின் முக்கியத்துவத்தையும், இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, கல்லூரி மற்றும் ஹாஸ்டல் கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளதையும் விளக்கினார்.

அனைத்து மாணவிகளும் பள்ளிக்கு வருகை தந்து முறையாக பாடம் படிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை கலெக்டர் அறிவுறத்தினார். சத்துணவு கூடத்தில் தயார் செய்யப்பட்ட உணவின் தரத்தை மாவட்ட கலெக்டர் சாப்பிட்டு ருசி பார்த்தார்.

ஆய்வுகளின் போது, நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ராமன், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்