கல்லூரி பகுதிகளை போதைப் பொருள் இல்லாத வளாகமாக அறிவிக்க கலெக்டர் வேண்டுகோள்

கல்லூரி பகுதிகளை போதைப் பொருள் இல்லாத வளாகமாக அறிவிக்க கலெக்டர் வேண்டுகோள்
X

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போதைப்பொருள் விழிப்புணர்வு போஸ்டர்களை கலெக்டர் ஸ்ரேயா சிங், போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி ஆகியோர் வெளியிட்டனர்.

கல்லூரி பகுதிகளை, போதைப் பொருட்கள் இல்லாத வளாகமாக அறிவிக்க கல்லூரி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி பகுதிகளை, போதைப் பொருட்கள் இல்லாத வளாகமாக அறிவிக்க கல்லூரி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பாதையை மாற்றும் போதை எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் கீழ் கல்லூரி பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம்மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், கொரோனா காலகட்டத்தில், தனிமை சூழலில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகும் நிலை சிலருக்கு ஏற்பட்டது. இந்த நிலையை மாற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்தை, போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளும் சேர்ந்து காவல்துறை பங்களிப்புடன் மாவட்ட நிர்வாகம் சார்பில், விண்ணைத்தொடு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பள்ளி மாணவ, மாணவிகளுக்காக செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள 177 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு போதைப் பொருட்களால் புற்றுநோய் உருவாதல் உள்ளிட்ட தீங்குகள் குறித்தும் அவற்றிற்கு ஆட்படாமல் தடுத்தல் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.

விண்ணைத்தொடு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 86 மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டு சாதாரண மாணவர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசால் தடைசெய்யப்பட்ட போதை உண்டாக்கும் பாக்குகளை விற்பனை செய்த 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. தவறு செய்த 2 நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் தங்களது சமூக பொறுப்புணர்வை உணர்ந்து, பயிற்சி மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நல்ல வழிகாட்ட வேண்டும். இந்த பயிற்சி முகாமை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கான விண்ணைத்தொடு வழிகாட்டு நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரி வளாகத்தை போதைப்பொருட்கள் இல்லாத வளாகமாக அறிவிக்க வேண்டும் . நாமக்கல் மாவட்டத்தை போதையில்லா சமுதாயம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ், மாவட்ட சமூகநல அலுவலர் கீதா, அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி முதல்வர் குமரவேல் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story