சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மூலம் ஊக்கப்பரிசு: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்
பட விளக்கம் : நாமக்கல் ஆவின் மூலம் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க பணியாளர்களுக்கு, ஊக்கப்பரிசுகளை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் கலெக்டர் உமா, எம்.பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர்.
சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மூலம் ஊக்கப்பரிசு: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்
நாமக்கல்,
நாமக்கல் ஆவின் மூலம் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசுத் தொகையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
நாமக்கல் ஆவின் சார்பில், தரமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசளிப்பு விழா, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., லோக்சபா எம்.பி. மாதேஸ்வரன், எம்எல்எக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு, சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்கள் மொத்தம் 9 பேருக்கு ரூ.54 ஆயிரம் பரிசு வழங்கி பேசியதாவது:
சேலத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 17.12.2018 முதல் தனியாக செயல்பட்டு வருகிறது. தற்போது, நாமக்கல் ஆவின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 1.39 லட்சம் லிட்டர் பால் கிராம அளவில் செயல்படும் 489 இணைப்பு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 81,000 லிட்டர் பால் நாமக்கல் மாவட்ட மக்களின் நுகர்வுக்காக, உள்ளூர் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள பாலில் 35,000 லிட்டர் பால் நாளொன்றுக்கு சென்னை மக்களின் நுகர்வுக்காகவும், சேலம் ஆவின் மூலம் பால் உபபொருட்களாக மாற்றம் செய்யவும் அனுப்பப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.45 லட்சம் மதிப்புள்ள பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒன்றியம் தொடர்ந்து லாபகரமாக செயல்பட்டு வருவதால், ஒன்றியத்தின் லாபத்தில் ஒருபகுதி உற்பத்தியாளர்களுக்கு போனஸாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் உத்தரவின்படி, நாமக்கல் ஆவின் மூலம், 3 சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், 3 சிறந்த சங்க செயலாளர்கள் மற்றும் 3 சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பான் மைய செயலாளர்கள் என மொத்தம் 9 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10,000, 2 -ஆம் பரிசாக தலா ரூ.5,000 மற்றும் 3ஆம் பரிசாக தலா ரூ.3,000 என மொத்தம் ரூ.54,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது, என அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் மாகநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி முதல்வர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu