நாமக்கல்லில் ரூ.70 கோடி மதிப்பிப்பீட்டில் ஆவின் நிறுவனம்: எம்பி தகவல்

நாமக்கல்லில் ரூ.70 கோடி மதிப்பிப்பீட்டில் ஆவின் நிறுவனம்: எம்பி தகவல்
X

நாமக்கல்லில் ஆவின் நிறுவனம் அமைப்பதற்கான படிவங்களை, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர், தேசிய பால்வள வாரிய மண்டல துணைத்தலைவர் ராஜூவிடம் வழங்கினார்கள். அருகில் எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர்.

நாமக்கல்லில் ரூ.70 கோடி மதிப்பீட்டில், ஆவின் நிறுவனம் அமைக்கப்படும் என்று எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனம், தற்போது சேலம் மாவட்டத்துடன் இணைந்து செயல்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பால் குளிரூட்டும் நிலையம் மட்டுமே உள்ளது. பால் பாக்கெட் தயாரித்தல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட அனைத்தும் சேலம் ஆவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக அரசு அமைத்தால், நாமக்கல் மாவட்டத்திற்க தனியாக ஆவின் நிறுவனம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில் தற்போது நாமக்கல் மாவட்டத்திற்கு தனி ஆவின் நிறுவனம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பில் நாமக்கல் ஆவின் நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி தேசிய பால்வள வாரிய தென்மண்டல துணைத்தலைவர் ராஜூ தலைமையிலான அதிகாரிகள், நாமக்கல் ஆவின் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி ஆகியோர் நாமக்கல் ஆவின் அமைப்பதற்கான படிவங்களை, தேசிய பால்வள வாரிய தென்மண்டல துணைத்தவைர் ராஜூவிடம் வழங்கினார்கள்.

பின்னர் ராஜேஷ்குமார் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில், நாமக்கல் மாவட்டத்திற்கு தனியாக ஆவின் நிறுவனம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் நாமக்கல்லில் உள்ள குளிரூட்டும் மையத்தில் குளிரூட்டப்பட்டு சேலம் ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சில நேரங்களில் சேலம் ஆவின் நிறுவனத்தில் கூடுதலான பால் தேக்கம் அடைந்தால், கொள்முதல் செய்யப்பட்ட பால் நாமக்கல்லிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் நிலை இருந்து வந்தது. இதை மாற்றி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பால் அனைத்தையும் கொள்முதல் செய்து பால் பாக்கெட், பால் பவுடர், ஐஸ் கிரீம் போன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில், நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனத்தை அமைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள 8 ஏக்கர் பரப்பில், ரூ.70 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் ஆவின் நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு, தேசிய பால்வள வாரியம் மற்றும் ஆவின் ஆகியோர் இணைந்து அமைக்கப்படும் இந்த நிறுவனம் துவக்கப்பட்டால், நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் உற்பத்தி செய்யும் மொத்த பாலும் கொள்முதல் செய்யப்படும். இந்த மையம் அமைக்கப்பட்ட உடன் நாமக்கல்லில் பால் பாக்கெட்டுகள், நெய், பால்கோவா, இனிப்புகள் உள்ளிட்ட அனைத்து மதிப்பு கூட்டப்பட்டபொருட்களும் உற்பத்தி செய்யப்படும் என அவர் கூறினார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!