நாமக்கல் மாவட்டத்தில் 300 இடங்களில் இலவச கால்நடை மருத்துவ முகாம்கள்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.
நாமக்கல் மாவட்டத்தில் 300 இடங்களில் இலவச கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில், கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, 2023-24 ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 15 ஊராட்சி ஒன்றியங்களில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 20 கால்நடை முகாம்கள் வீதம் 300 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் அக்டோபர் 2023-ல் முகாம்கள் துவங்கி பிப்ரவரி-2024ல் நிறைவுபெறவுள்ளது, இம்முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், CLP அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.
நமது மாவட்டத்தில் உள்ள, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கிராமங்களில், இம்மாதம் துவங்கி வருகிற 2024 பிப்ரவரி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது. கால்நடை முகாம்கள் நடத்தப்படும் நாள் மற்றும் இடம் அந்தந்த கால்நடை உதவி மருத்துவர்களால் அறிவிக்கப்படும். குறிப்பிட்ட நாளில் கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகளை அழைத்து சென்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu