மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு புதிய திட்டங்கள் - நாமக்கல் மாவட்ட மாநாட்டில் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு புதிய திட்டங்கள் - நாமக்கல் மாவட்ட மாநாட்டில் அறிவிப்பு!
X
மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு புதிய திட்டங்கள் - நாமக்கல் மாவட்ட மாநாட்டில் அறிவிப்பு

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாடு

திருச்செங்கோடு ஒளவை கல்வி நிலையத்தில் சஷம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பில் நாமக்கல் மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் உரிமைகள் தின விழாவைத் தொடர்ந்து இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநாட்டில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பல மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பாஜக, இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் பிரமுகர்கள், உள்ளூர் முக்கியஸ்தர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றும் பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர்கள் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு பேசுகையில், "மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திறமைகளை அறிந்து ஊக்குவிக்க வேண்டும். சிறு கடைகள் மற்றும் சாலையோர வியாபாரம் தொடங்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு நான் நிதியுதவி வழங்குவேன்" என்று தெரிவித்தார்.

கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி பேராசிரியர் கல்யாணசுந்தரம், மாற்றுத்திறனாளியாக இருந்து வாழ்க்கையில் உயர்ந்ததற்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் ராயல் செந்தில் அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.

சஷம் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அமைப்பின் கிருஷ்ணகுமார், திருச்செங்கோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்தார்.

Tags

Next Story