விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு தர்ணா

விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு தர்ணா
X

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பிப். 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை தாசில்தார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதில் விசைத்தறி சங்கங்களான எல்.பி.எப், ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.சி.சி.டி.யூ, எல்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., உள்ளிட்ட விசைத்தறி கூட்டுத்தொழில் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் பாலசுப்ரமணி, பாலுசாமி, ஆறுமுகம், சக்திவேல், வெங்கடேசன், செல்வராஜ், அருள் ஆறுமுகம், சரவணன், தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. மாவட்ட கலெக்டர் முன்னிலையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் கூட்டு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் ஏழு ஆண்டுகள் கடந்து இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அடிப்படையில் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வட்டாச்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காண வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி தாசில்தார் சண்முகவேல் தலைமையில், அடப்பு தறி உரிமையாளர்களுடன் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் மைக்ரோ பைனான்ஸ், குழு கடன் என பல இடங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் கடன் பெற்றதால், நிதி நிறுவனத்தினர் கடனை திரும்ப செலுத்தச் சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் எவ்வளவோ சொல்லியும், நிதி நிறுவன நிர்வாகிகள் கேட்பதாக இல்லை. தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்களை வற்புறுத்தி வருகின்றனர்.

இது குறித்து ஏ.ஐ.சி.சி.டி.யூ. நிர்வாகி சுப்பிரமணி கூறுகையில், விசைத்தறி கூலி உயர்வு வேலை நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தினக்கூலிகள் வருமானம் இல்லாமல் போராடி வருகிறார்கள். இந்நிலையில் நிதி நிறுவனத்தார், சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் சிறிது காலம் அவகாசம் வழங்கிட வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விசைத்தறி கூலித் தொழிலாளர்களுக்கு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினர்.

கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இது குறித்து சங்கமேஸ்வரன் கூறுகையில், நூல்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில் நடத்துவதே பெரும் சிரமமாக உள்ளது. தொழிற்சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் கேட்டனர். இது குறித்து செயற்குழு கூட்டி முடிவெடுத்து சொல்கிறோம் என்று கூறி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிசங்க நிர்வாகி சுப்பிரமணி கூறுகையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் செயற்குழு கூட்டம் கூட்டி முடிவு சொல்வதாக கூறினார்கள். இது எங்களுக்கு உடன்பாடில்லை. தாசில்தாரை சந்தித்து இது பற்றி பேசினோம். முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!