குமாரபாளையத்தில் விதைத் திருவிழா, மூலிகைப் பொருட்கள் கண்காட்சி..
விதை திருவிழாவில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டமலை ஆர்கானிக் தோட்டம் மற்றும் ரித்திக்க்ஷா பொதுநல அமைப்பின் சார்பில் விதை திருவிழா நிறுவனர் மரகதம் தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக வேளாண்மைத் துறை இயக்குநர் ராஜேந்திரன், ஈசன் புட்ஸ் நிறுவனர்கள் திலகவதி, சந்திரலேகா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், 500-க்கும் மேற்பட்ட காய்கறி விதைகள், 60-க்கும் மேற்பட்ட மரவகை விதைகள், 30-க்கும் மேற்பட்ட இயற்கை சார்ந்த விற்பனை அங்காடிகள், மூலிகை விதைகள், கைவினை பொருட்கள், மூலிகை பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கண்காட்சியை குமாரபாளையம், பவானி, சங்ககிரி, சேலம், கரூர், திருச்செங்கோடு, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்து பொதுமக்கள் கண்டு சென்றனர். இதில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் மற்றும் விதை பந்துகள் வழங்கப்பட்டன.
விதைப் பந்து திருவிழா: குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் விதைப்பந்து திருவிழா முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, நான்காயிரம் விதைப்பந்துகளை மாணவ, மாணவிகள் தயாரித்து, அவைகளை வனப்பகுதியில் போட்டனர். இதில், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் மனோகரன், ஆய்வக பொறுப்பாளர் சுமதி, விதைப்பந்து ஒருங்கிணைப்பாளர் வைரமணி, பசுமை இயற்கை விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விதைத்திருவிழா குறித்து விவசாயிகள் கூறியதாவது:
பசுமை இயற்கை விவசாய இயக்கத்தினர் ஒருங்கிணைத்து 4 ஆவது ஆண்டாக நடத்தப்படும் இந்தத் திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய காய்கறி, நெல், கீரை ஆகியவற்றின் விதைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகளும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. மேலும், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட உணவு வகைகள், மூலிகை மருந்துகள், பழங்கள், தேன், மிளகு போன்ற எண்ணற்ற பொருள்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu