குமாரபாளையம் கிரைம் செய்திகள்

குமாரபாளையம் கிரைம் செய்திகள்
X

பைல் படம்.

முனியப்பன் கோவில் பிரிவு பகுதியில் சேலத்திலிருந்து பவானி சென்ற தனியார் பஸ், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தனியார் பஸ், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்:

சேலம், குடுமியான்புரம், சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைய கவுண்டர், 47. கட்டுமான தொழிலாளி. நேற்று காலை 8:30 மணியளவில் இவரும், இவரது உறவினர் சீனிவாசன், 36, இருவரும் பவானி கூடுதுறை கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சீனிவாசன் ஓட்ட, வெள்ளைய கவுண்டர் பின்னால் உட்கார்ந்து வர, சேலம் கோவை புறவழிச்சாலையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். பல்லக்காபாளையம் அருகே முனியப்பன் கோவில் பிரிவு பகுதியில் வரும் போது சேலத்திலிருந்து பவானி செல்லும் தனியார் பஸ், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த அடிபட்டு வெள்ளைய கவுண்டர் சம்பவ இடத்திலேயே பலியானார். டூவீலர் ஓட்டி வந்த சீனிவாசன் பலத்த அடிபட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டூவீலர்கள் மோதல், இருவர் படுகாயம்:

குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் பகுதியில் வசிப்பவர் திருமூர்த்தி, 28. கட்டுமான தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மாலை 6:30 மணியளவில் சேலம் சாலை பவர் ஹவுஸ் அருகே தனது கே.டி.எம். டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது மூன்று பேருடன் பிளாட்டினம் டூவீலரில் வந்த நபர், தனது வாகனத்தை திருப்ப முயற்சிக்கும் போது, திருமூர்த்தி வந்த வாகனம் மீது மோதியது. இதில் திருமூர்த்தி மற்றும் எதிரில் வந்த வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து வந்த கூலித் தொழிலாளி மகேஷ், 35, இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குமாரபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து எதிரில் வந்த பிளாட்டினா வாகன ஓட்டுனர் கூலித் தொழிலாளி வெற்றிவேல், 27, என்பவரை கைது செய்தனர். இவரது டூவீலரில் மூன்றாவதாக உட்கார்ந்து வந்த லோகநாதனும், வெற்றிவேலும் எவ்வித காயமும் இல்லாமல் தப்பினர்.

அரசு அனுமதியின்றி மது விற்ற நபர்கள் கைது:

குமாரபாளையத்தில் அரசு அனுமதியின்றி மது மற்றும் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, எஸ்.எஸ்.ஐ. சிவகுமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது குளத்துக்காடு, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பெட்டிக்கடை அருகே மது விற்ற அண்ணாமலை, 50, ஈஸ்வரி, 60, ஆகியோர் கைது செய்யப்பட்டு 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இடைப்பாடி சாலை, ஜி.ஹெச் அருகே புகையிலை பொருட்கள் விற்ற மாதேஸ்வரன், 42, கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 4 புகையிலை பொருட்கள் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!