திருவிழாவிற்காக பக்தர்கள் விரதம்: வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

திருவிழாவிற்காக பக்தர்கள்  விரதம்: வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
X

குமாரபாளையத்தில் பெரும்பாலான பக்தர்கள் திருவிழா விரதமிருந்து வருவதால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

குமாரபாளையத்தில் பெரும்பாலான பக்தர்கள் திருவிழா விரதமிருந்து வருவதால் இறைச்சி கடைகளில் வெறிச்சோடிக் காணப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் காளியம்மன், மாரியம்மன் திருவிழா பூச்சாட்டு விழா நடந்துள்ளது. இதில் மகா குண்டம் இறங்குதல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், உள்ளிட்ட பல வேண்டுதல்களை நிறைவேற்ற பெரும்பாலான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து கொண்டு விரதமிருந்து வருகிறார்கள். இதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகளில், இறைச்சி வாங்க பொதுமக்கள் வராததால் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் மகா குண்டம், தேர்த்திருவிழா பிப்.14 பூச்சாட்டுதலுடன் துவங்கி, மறுபூச்சாட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

பிப். 22 கொடியேற்று விழா, பிப். 28ல் அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், தேர்க்கலசம் வைத்தல், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2ல் அம்மன் திருக்கல்யாணம், மகா தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச். 3ல் தேர் நிலை அடைதல், வாண வேடிக்கை காட்சி விழா, அம்மன் அலங்கார திருவீதி உலா, மார்ச். 4ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 5ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டு மற்றும் கம்பம் நடுதல் விழா நடைபெற்றது.

இதே போல் குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் சக்தி காளியம்மன், சக்தி மாரியம்மன் கோவிலில் 23ம் ஆண்டு பூ மிதித்தல் விழாவையொட்டி நேற்று மறு பூச்சாட்டு விழா நடைபெற்றது. மாரியம்மனுக்கு கம்பம் நடுதல், 28ல் அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காளிமுத்து, நிர்வாகிகள் சுப்ரமணி, நந்தகுமார், சண்முகம், கிருஷ்ணராஜ், தங்கராசு மற்றும் குண்டம் பராமரிப்பு குழுவினர் செய்து வருகின்றனர். பிப். 28, மார்ச். 1, மார்ச். 2 ஆகிய 3 நாட்களும் பக்தர்களுக்கு மூன்று வேளைகளும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!