குமாரபாளையத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு வேலை நிறுத்தம்

குமாரபாளையத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு வேலை நிறுத்தம்
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு வேலை நிறுத்தம் தொடர்ந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

மாவட்ட கலெக்டர் முன்னிலையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் கூட்டு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் ஏழு ஆண்டுகள் கடந்து இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அடிப்படையில் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

வட்டாச்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காண வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி தாசில்தார் சண்முகவேல் தலைமையில், அடப்பு தறி உரிமையாளர்களுடன் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாமல் பிப். 8ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மைக்ரோ பைனான்ஸ், குழு கடன் என பல இடங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் கடன் பெற்றதால், நிதி நிறுவனத்தினர் கடனை திரும்ப செலுத்தச் சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் எவ்வளவோ சொல்லியும், நிதி நிறுவன நிர்வாகிகள் கேட்பதாக இல்லை. தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்களை வற்புறுத்தி வருகின்றனர்.

இது குறித்து ஏ.ஐ.சி.சி.டி.யூ. நிர்வாகி சுப்பிரமணி கூறுகையில், விசைத்தறி கூலி உயர்வு வேலை நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தினக்கூலிகள் வருமானம் இல்லாமல் போராடி வருகிறார்கள். இந்நிலையில் நிதி நிறுவனத்தார், சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் சிறிது காலம் அவகாசம் வழங்கிட வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விசைத்தறி கூலித் தொழிலாளர்களுக்கு உதவிட வேண்டும் எனக் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture