சசிகலா வந்தால் ஆட்சி நீடிப்பது சந்தேகம் - மு.க.ஸ்டாலின்

சசிகலா வந்தால் ஆட்சி நீடிப்பது சந்தேகம் - மு.க.ஸ்டாலின்
X

சசிகலா வெளியே வந்தால் இந்த ஆட்சி நீடிப்பது சந்தேகம் என நாமக்கல் மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாதரை ஊராட்சியில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வெப்படை நான்கு வழி சாலை சந்திப்பில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

பின்னர் பேசிய ஸ்டாலின், மதுவிலக்கு துறை அமைச்சராக உள்ள தங்கமணி மது ஆலைகளில் இருந்து வருமானம் வருவதால் மதுவிலக்குக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் தங்கமணி தரமற்ற நிலக்கரி வாங்கியதில் 952 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாகவும் குமாரபாளையம் தொகுதியில் சாயஆலை நீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இதுவரை பொது சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை,வரும் 27-ம் தேதி சிறையில் உள்ள சசிகலா வெளியே வரும் நிலையில் தமிழக முதல்வர் தன்னைக் காத்துக் கொள்வதற்காக டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்திருக்க கூடும் என்றும், சசிகலா விடுதலையான பிறகு மீதமுள்ள 4 மாதமும் இந்த ஆட்சி நிலைத்திருக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாக ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

Tags

Next Story