அனைவருக்கும் தடுப்பூசி போடுங்கள்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

அனைவருக்கும் தடுப்பூசி போடுங்கள்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
X

டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான  ஆர்.பி. உதயகுமார் நிர்வாக அதிகாரியிடம் ஆலோசனை செய்த போது.

மதுரையில் அனைத்து மக்களுக்கு தடுப்பூசி போட முன்னாள் அமைச்சர் வலியூறுத்தல்.

அரசு தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்தாலும், மரண எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து வருகிறது. அவசரகால நடவடிக்கையாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். -முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் நிர்வாக அதிகாரியிடம் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:

கொரோனா பாதிப்பு தொற்று குறைவது தற்போது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. அதே வேளையில் மனித குலத்தை அச்சுறுத்தும் வகையில் கடந்த மே மாதம் மட்டும் 10,000 நபர்கள் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு முன்பு ஓராண்டில் கொரோனாவால் 14,000 நபர்கள் இறந்துள்ளனர் தற்போது தினசரி 500 நபர்கள் கொரோனாவால், பலியாகி வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும் காய்ச்சல் மரணங்களையும் சேர்த்து பார்த்தால் 700 முதல் 1000 வரை இறப்பதாக வருகின்ற புள்ளி விவர கணக்கு நமது மனிதகுலத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புள்ளி விவர அடிப்படையில் நாம் பார்க்கிற போது இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களை நாம் இழக்கப் போகறோமோ என்று மனிதகுலம் புரியாத புதிராக விடை தேடிக் கொண்டு உள்ளனர்.

தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்ததால், தினசரி 35,000 ஆக இருந்த பாதிப்பு தற்போது படிப்படியாக மக்களின் ஒத்துழைப்போடு மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கையால் குறைந்து வருவது நமக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும்,

இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட தொற்று பரவலை கட்டுபடுத்த தேவையான மருத்துவ கட்டுமானத்தை உருவாக்க அரசு தடுமாறியது என்பதை ஆம்புலன்ஸ்சில் ஏற்பட்ட உயிரிழப்புகள், ஆக்சிஜன் பற்றாக்குறை, உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை போன்ற மருத்துவ கட்டமைப்பை உருவாக்க அரசு எடுத்த நடவடிக்கை எந்த அளவிற்கு மக்களுக்கு பயன் அளித்தது என்பது கேள்விக்குறியாக இருந்தது.

எது எப்படியாக இருப்பினும் எல்லோருடைய நோக்கமும், விருப்பமும் ஒன்றுதான். தமிழகத்தில் மக்களின் உயிரைக் காக்க போர்க்கால அடிப்படையில் குறுகிய கால அவகாசத்தில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் இரண்டாவதாக கொரோனா உயிர் இழப்பை தவிர்க்க போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தென்மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு நாள்தோறும் உயர்ந்து வருவது நமக்கு கவலை அளிக்கிறது.

மதுரை உட்பட 6 மாவட்டங்களில் நேற்று மட்டும் 48 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு அரசின் சார்பில் வெளியிடப்பட்டது.மதுரை மாவட்டத்தில் இதுவரை 66,571 பாதிக்கப்பட்டதில் 51,404 நபர்கள் குணம் அடைந்து உள்ளனர். தற்போது 14,224 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை மதுரையில் 943 நபர்கள் உயிரிழந்து உள்ளனர் என்கிற செய்தி நமக்கு கவலை அளிப்பதாக உள்ளது.

கடந்த மே மாதம் 7ம் தேதியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தாக்கம் மூன்றில் ஒரு பங்காக குறைந்தாலும் பலி எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. மதுரையில் நேற்று மட்டும் 13 பேர் பலியானதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அவசர கால போர்கால நடவடிக்கையாக தடுப்பு ஊசியை அனைவருக்கும் செலுத்துவதை மேற்கொண்டு மக்களை காத்திட வேண்டும் என்று அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் வைக்கிறேன் என்று கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!