கள்ளிக்குடி அருகே அடிப்படை வசதிகள் கோரி, கிராம மக்கள் முற்றுகை..!
அடிப்படை வசதிகள் கோரி ,ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட்ட மக்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குராயூர் கிராமத்தில் உள்ள மேலத்தெரு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால், சிமெண்ட் சாலை போடப்பட்டது. தற்போது, அச்சாலையும், கழிவு நீர்வாய்க்காலும் சேதம் அடைந்து, பெயர்ந்து காணப்படுவதால் கழிவு நீர் வாய்க்காலிருந்து வெளியேறுகிற கழிவுநீர் சாலையில் வருவதால், கடும் துர்நாற்றத்துடன் நோய்த் தொற்று ஏற்படுகிறது.
மேலும், குடிநீர் சப்ளை செய்யக்கூடிய வழிகளிலும் கழிவுநீர் சென்று மாசு ஏற்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. சிமெண்ட் சாலை பெயர்ந்து கற்களாக காணப்படுவதால் அச்சாலையில் குழந்தைகள், பெண்கள், முதியோர் நடக்க முடியாமல் சிரமப்படுவதாக புகார் தெரிவித்தனர் .
இது குறித்து, குராயூர் ஊராட்சி மன்றத் தலைவர் வீரபத்திரனிடம், கிராம மக்கள் தெரிவித்தும், அவர் அடிப்படை வசதிகளை செய்து தர மறுத்ததாகவும், இந்த மக்களை அலட்சியப்படுத்துவதாகவும் கூறி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தர்மராஜிடம் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, புகாரை ஏற்றுக் கொண்ட தர்மராஜன், நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu