கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை
கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், உணவு விடுதி, தங்கும் விடுதி, மண்டபம், சந்தை, கேளிக்கை விடுதி, பேருந்துகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்;கடைகள், திருமண மண்டபங்கள் ஆகிய பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது எனவும், வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் வருகை குறித்து தனிப்பதிவேடு பராமரித்து அதில் தடுப்பூசி செலுத்திய விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் வரும் பட்சத்தில் அவர்களை, தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவுறுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்த பிறகே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம், சமூக இடைவெளி, ஹேண்ட் வாஷ் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் 12 சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் இக்குழு ஆய்வு செய்யும். 17.02.2021 அன்று சுமார் 165 வணிக நிறுவனங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து மாநகராட்சி கண்காணிப்பு குழுக்களின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத சில வணிக நிறுவனங்களுக்கு ரூ.26400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்திக் கொள்ளுமாறும், பொது இடங்களில் முகக்கவசம், தனி நபர் இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu