வாடிப்பட்டி அருகே இளைஞர் தற்கொலை: காவல் உதவி ஆய்வாளர் மீது புகார்

வாடிப்பட்டி அருகே இளைஞர் தற்கொலை: காவல் உதவி ஆய்வாளர் மீது புகார்
X

வாடிப்பட்டி அருகே தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.

வாடிப்பட்டி அருகே இளைஞர் தற்கொலை செய்து கொண்டதற்கு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் முருகன் இவருடைய மகன் ராம்கி வயது 23. இவர் தனது வீட்டில் , தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து, வாடிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் .

பின்னர், ராம்கிஉடலை பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, தற்கொலை செய்வதற்கு முன்பாக ஒரு துண்டு சீட்டில் அதிபன், முருகேசன், ஜான் முருகன் என்று ராம்கி எழுதி வைத்திருந்ததை அவருடைய குடும்பத்தினர் கைப்பற்றினர் .

அதில், முருகேசன் என்பவர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார். இதுகுறித்து ராம்கியின் தாயார் சுமதி, கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது :

கடந்த எட்டாம் தேதி இரவில் எனது மகன் ராம்கியிடம் பழைய பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு கச்சை கட்டியை சேர்ந்த ஜான் முருகன், அதிபன் ஆகியோர் வந்து ஊர் மந்தையில் வைத்து ராம்கியை அடித்தனர். அதே சமயத்தில், காவல்நிலையத்திற்கு பொய்யான தகவலை கொடுத்ததில் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் சம்பவ இடத்திற்கு வந்து முறையாக விசாரிக்காமல், எனது மகன் ராம்கியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் ஜான் முருகன் அதிபன் ஆகியோருடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தினார். இதனால் தான் எனது மகன் ராம்கி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று, புகாரில் தெரிவித்திருந்தார்.

எனது மகன் தற்கொலைக்கு காரணம் ஜான் முருகன், அதிபன், மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் என்று தனது கைப்பட எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டான் எனவே, எனது மகன் தற்கொலைக்கு காரணமான உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபுகாரில் தெரிவித்து இருந்தார் .

இது பற்றி தகவல் அறிந்த ராம்கியின் உறவினர்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி , வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் செய்தனர் .

மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறினர். இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் ஆகியோர் ராம்கியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் பெற்றோரும் உறவினர்களும் ராம்கியின் உடலை பெற்று சென்றனர் .

மதுரை வாடிப்பட்டி அருகே வாலிபரின் தற்கொலைக்கு காரணமாக காவல் உதவி ஆய்வாளரே இருப்பதாக புகார் தெரிவித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!