சோழவந்தான் அருகே விக்ரமங்கலம் பகுதியில் மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு
மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்த நிலையில் பள்ளியில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள்
கள்ளர் சீரமைப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளி கல்வித் துறையுடன் இணைக்க கூடாது என, தமிழக அரசை கண்டித்து கடந்த சில தினங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளில், உள்ள அரசு கள்ளர் பள்ளி மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்து ஒரு நாள் அடையாளமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழவந்தான் அருகே, மேலக்கால் அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி, அய்யப்பன் நாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி, விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி, நரியம்பட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 3000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல், புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, விக்கிரமங்கலம் எட்டூர் கமிட்டி தலைவர் ஜெயபால் மற்றும் விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கலியுக நாதன் வழக்கறிஞர் இளையரசு ஆகியோர் கூறும்போது :
கள்ளர் சீரமைப்பு பள்ளி மற்றும் ஆதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொண்டுள்ளது, மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் பள்ளி கல்வித்துறைடன் கள்ளர் பள்ளி மற்றும் ஆதிராவிட நலத்துறை பள்ளிகளை இணைக்கும் முடிவு குறித்து அறிக்கையை, அரசுக்கு சமர்ப்பித்துள்ளது .
இதன் அடிப்படையில் , அரசு கள்ளர் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை பள்ளிக்கல்வி த்துறையுடன் இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது இதனை, விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள பிரமலைக்கள்ளர் வகுப்பைச் சேர்ந்த நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்காக, ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டமும், தற்போது அரசு கள்ளர் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரு நாள் அடையாளமாக வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளோம். தமிழக அரசு இதன் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக பள்ளி கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர்பள்ளிகளை இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இல்லை என்றால் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.
விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், ஒரு மாணவரிடம் கூட பள்ளிக்கு வராததால் பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளிவளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வந்து தங்கள் பணிகளை வழக்கம்போல் மேற்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu