சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை
சோழவந்தான் பகுதியில் சாலையில் திரியும் மாடுகள்
சோழவந்தான் பகுதிகளில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கால்நடைகள் குறுக்கும் நெருக்கமாக சென்று விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, ஆர். எம். எஸ். காலனி பகுதியில், கால்நடைகளை வளர்ப்பவர்கள் காலை ஏழு மணி முதலே மாடுகளை சாலைகளில் விட்டு விடுகின்றனர். இதனால், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது, சாலையின் குறுக்கே கால்நடைகள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
மேலும், சாலையோரங்கள் மற்றும் சாலையின் நடுவில் இரண்டுக்கும் மேற்பட்ட கால்நடைகள் சர்வ சாதாரணமாக படுத்து கொண்டு இருப்பதால், போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக போக்குவரத்து பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தச்சம்பத்து கிராமத்தை சேர்ந்த இளைஞர் , வாடிப்பட்டி ஜவுளி பூங்காவில் பணியினை முடித்து, இருசக்கர வாகனத்தில் திரும்பும் போது சோழவந்தான் ஆர். எம். எஸ். காலனி அருகில் மாடு குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகையால், சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கால்நடை உரிமையாளர்களை அழைத்து, கால்நடைகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்த வேண்டும் அல்லது சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு, அபராதத்தை விதிக்க வேண்டும் என ,பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதே போல மதுரை நகரில் அண்ணாநகர், கோமதி புரம் மருதுபாண்டியர் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெரு,சௌபாக்ய கோயில் தெரு, வீரவாஞ்சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகிறது.
இது குறித்து, மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர், நகர் நல அலுவலர் கவனத்துக்கு கொண்டும் சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மதுரை நகரில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu