மதுரை அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்கள் அடாவடி வசூலா?
மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியத்தில் உள்ள குலமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழில் ஆகும். இங்கு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த எட்டாம் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.
அன்று முதல், மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, எடை போடுவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரின் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக புகார் கூறிய பின்பு, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரிப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது வரை மூடை ஒன்றுக்கு ரூபாய் 50 விவசாயிகளிடம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், சுமார் 2000 ஏக்கரில் விளைந்த நெல்மணிகள் அறுவடை செய்து வைக்கப்பட்ட நிலையில் அவற்றை முறையாக எடையிடுவதும் இல்லை. எடையிடப்பட்ட நெல் மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி செல்வதும் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்க வந்த அதிகாரியும், விவசாயிகளிடம் சமரசம் பேசி தவறு ஏதும் நடக்கவில்லை என்று ஒப்புதலாக கையெழுத்து வாங்கி சென்றது விவசாயிகளை மேலும் எரிச்சலூட்டியது.
எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக நெல் கொள்முதல் நிலையம் வந்து ஆய்வு செய்து முறைகேடு ஏற்படாத வண்ணம் விவசாயிகளுக்கு ஆவணம் செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி திமுகவின் கூட்டணி கட்சியினரே சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது இந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu