பஸ் நிலையத்துக்கு செல்ல இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்கலாமே..?!

பஸ் நிலையத்துக்கு செல்ல இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்கலாமே..?!
X

சோழவந்தான் பஸ் நிலையம் அருகே, சாலையில் இடையூறாக உள்ள மின் கம்பம்

சோழவந்தானில் சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையத்தை கடந்த ஜனவரி 6ஆம் தேதி காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில், பேருந்து நிலையம் எந்த நோக்கத்திற்காக திறக்கப்பட்டதோ அந்த நோக்கம் தற்போது வரை நிறைவேறாமல் உள்ளது. குறிப்பாக, சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய பேருந்துகள் பல்வேறு இடர்பாடுகளால் பேருந்து நிலையத்திற்குள் வர முடியாத

சூழ்நிலை உள்ளது. குறிப்பாக ,பேருந்து நிலையத்தின் சர்வீஸ் சாலையில் உள்ள மின்கம்பங்கள் பேருந்து வந்து செல்ல தடையாக இருந்து வருகிறது. பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே பீட்டா ரோடு செல்லும் சிஎஸ்ஐ சர்ச் உள்ள சாலையில் நடு ரோட்டில் அடுத்தடுத்து இரண்டு மின்கம்பங்கள் உள்ளது.

இந்த மின் கம்பங்களை அகற்றினால், மட்டுமே இந்த பகுதி வழியாக பேருந்து செல்ல முடியும். இந்த இரண்டு மின்கம்பங்களால் பேருந்துகள்செல்ல வழி இல்லாமல் குறிப்பிட்ட அளவு பேருந்துகள் மட்டுமே பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறது.

குறிப்பாக, திருமங்கலத்தில் இருந்து வரக்கூடிய பேருந்துகளும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டி நாச்சிகுளம் செல்லும் பேருந்துகளும் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் வரும் பேருந்துகளும் மட்டுமே பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறது . வாடிப்பட்டியில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நகரி வழியாக சோழவந்தான் வரும் பேருந்துகள் மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறை மன்னாடிமங்கலம் விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல முடியாமல் மறுபடியும் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்க கூடிய சூழ்நிலை உள்ளது .

ஆகையால், மின்சார துறையினர் இதில் தனிக் கவனம் செலுத்தி, சர்வீஸ் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்றி வைத்து போக்குவரத்திற்கு உள்ள இடையூறுகளை குறைக்க வேண்டும் எனவும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல மின் துறையினர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் ,பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!