அலங்காநல்லூர் அருகே அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் கிடைக்கவில்லையென புகார்

அலங்காநல்லூர் அருகே அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு  பணம் கிடைக்கவில்லையென புகார்
X

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்வேலிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திரண்ட விவசாயிகள்

விவசாயிகளுக்கு மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை பணம் வழங்காததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு மூன்று மாதங்களாக பணம் வழங்காததால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்வேலிபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 120 க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், 60 பேருக்கு பணம் வழங்கிய நிலையில் மீதி இருந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை பணம் வழங்காததால், விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அங்கிருந்த விவசாயிகள் கூறும்போது: கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நெல் நடவுக்காக நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடகு வைத்து நெல் விவசாயம் செய்திருந்தோம். மேலும், வட்டிக்கு பணம் வாங்கி நெல் விவசாயம் செய்து வந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை கல்வேலி பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் அருகில் இருந்த கொள்முதல் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொள்முதல் செய்திருந்தனர்.

ஆனால், இன்று வரை பணம் வழங்கவில்லை. இதுகுறித்து, தொடர்ந்து அதிகாரியிடம் தினமும் சென்று முறையிட்டும் இதுவரை எங்களுக்கு பணத்தை வழங்கவில்லை. மேலும், ஒரு மூட்டை நெல்லுக்கு கமிஷனாக ரூபாய் 50 கொடுத்திருக்கிறோம். அதுவும் எங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்திருக்கிறோம். அதையாவது தாருங்கள் என்று கேட்டு வருகிறோம். அதற்கும் சரியான பதில் தர மறுக்கிறார்கள். அங்குள்ள அதிகாரிகள் இதுகுறித்து, அதிகாரிகளிடம் சென்று கேட்டால், விவசாயிகளை ஒருமையில் திட்டி அனுப்புகின்றனர்.

ஆகையால், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு விவசாயிகளுக்கு உடனடியாக பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்த பகுதி விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
future ai robot technology