மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்: போலீஸார் அறிவிப்பு
கள்ளழகர் - கோப்புப்படம்
உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை 14.04.2022 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் நடைபெற உள்ளது.
இத்திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வரும் பக்தர்களுக்கு வசதியாக தெற்கு கோபுர வாசல் வழியாக இலவச அனுமதியும், மேற்கு கோபுர வாசல் வழியாக முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் அரசு நிர்வாக அதிகாரிகளும், ரூ.500/- மற்றும் ரூ.200/- கட்டண சீட்டு பெற்றுள்ள பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாகவும் திருக்கோவிலுக்குள் செல்ல இந்து சமய அறநிலையத்துறையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இத்திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள் அனைவரும் நாளை காலை 07.00 மணி முதல் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவு வாசல்களில் பரிசோதனைக்கு பின்பு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் எப்பொருட்களையும் (செல்போன் உட்பட) எடுத்து வர அனுமதியில்லை.
பக்தர்கள் மேற்கு மற்றும் வடக்கு ஆடி வீதிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் அமரும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பின்பு பக்தர்கள் வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வழியாக வெளியே செல்ல வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள போதிலும், முற்றிலுமாக ஒழியவில்லை என்பதால், பக்தர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பக்தர்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல்துறை முகக்கவசம் மற்றும் குடி தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அனைவரும் தாங்கள் அணிந்து வரும் நகைகளை பாதுகாப்புடன் வைத்துக்கொள்வதற்காக SAFETY PIN வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சியினை காண வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு மஞ்சள் நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் மேற்காவணி மூல வீதியிலும், பிங்க் நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் தெற்கு ஆவணி மூல வீதியிலும், அனுமதி அட்டை இல்லாதவர்கள் தெற்கு மற்றும் வடக்கு மாசி வீதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 16.04.2022 ஆம் தேதி காலை 05.50 மணிக்கு மேல் 06.20 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பச்சை நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் A.V. பாலத்திலும், பிங்க் நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் மினி பஸ் ஸ்டாண்டிலும் (MINI BUS-STAND), நீல நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் அண்ணா பேருந்து நிலையத்திலும், அனுமதி அட்டை இல்லாதவர்கள் கிழக்கு மற்றும் வடக்கு மாசி வீதிகள், குருவிக்காரன் சாலை மற்றும் டாக்டர்.தங்கராஜ் சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டும்
ஸ்ரீ மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்கள், பைனாகுலர் பயன்பாடு கொண்ட கண்காணிப்பு டவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்ற செய்கைகளில் ஈடுபடும் நபர்களை FACE RECOGNITION SOFTWARE என்ற செல்போன் செயலி மூலம் கண்டறியும் வசதி பாதுகாப்பு அலுவலில் உள்ள அனைத்து காவல் ஆளினர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் BODY WORN CAMERA பொருத்தியுள்ள காவல் ஆளிநர்களுக்கும், மேலும் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தனிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மொத்தம் 3500 காவல்துறையினர் மதுரை மாநகரத்திலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர். மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்கள் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் திருக்கோவிலின் உள்ளே செயல்பட்டு வரும் காவல் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்ணை 83000-17920 தொடர்பு கொண்டும் மற்றும் மீனாட்சியம்மன் திருக்கோவிலை சுற்றியும், வைகை ஆற்றில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை சுற்றியும் நிறுவப்பட்டுள்ள MAY I HELP YOU BOOTH - களையோ கண்காணிப்பு டவர்களில் உள்ள காவல் ஆளிநர்களையோ அணுகி விபரம் தெரிவிக்கலாம்.
மதுரை மாநகராட்சியும், மதுரை மாநகர காவல்துறையும் இணைந்து 'மாமதுரை" என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் மேற்படி செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சிகள், ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் மற்றும் ஸ்ரீ கள்ளழகர் சாமி சென்று கொண்டிருக்கும் இடத்தினையும் உடனுக்குடன் (PRESENT LOCATION ) தெரிந்து கொள்ளலாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu