மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு கேட்டு தட்டி ஏந்தி போராட்டம்
என்.தட்டக்கல் கிராமத்தில், விவசாயிகள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி, மாந்தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மா விவசாயிகள் தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருகின்றனர். இவ்வாண்டும் பனி, வெயில் மற்றும் புதிய வகையான புழுத் தாக்குதல் உள்ளிட்டவையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து மா விவசாயிகளின் கூட்டமைப்பு மற்றும் கேஆர்பி அணை இடதுபுறக்கால்வாய் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி போராட்டம் நடந்தது. அதன்படி, என்.தட்டக்கல் கிராமத்தில் மாந்தோட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, ஒருங்கிணைப்பாளர் சவுந்திராஜன், பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் சிவகுரு ஆகியோர் கூறுகையில், பூச்சி தாக்குதலால் மா பூக்கள் கருகின. உரிய நேரத்தில் மழை இல்லாததால், பூக்கள் பூத்து மரங்களில் காய் பிடிக்கவில்லை. தண்ணீர் விலைக்கு வாங்கி விளைவிக்கப்பட்ட காய்கள் மட்டுமே சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. அதற்கும் போதிய விலை கிடைக்காமல், சாலையில் கொட்டும் நிலைதான் ஏற்பட்டது.
தமிழக அரசு வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் மா விவசாயிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்து, ஆய்வுகள் மேற்கொண்டு, ஏக்கருக்கு ரூ-.40 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மாங்கூழ் தொழிற்சாலைகள் நடத்துபவர்கள் சிண்டிகேட் அமைத்து குறைவான விலைக்கு மாங்காய்கள் கொள்முதல் செய்வதை தடுக்க, மாவிவசாயிகளுக்கென தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றனர்.
இந்த போராட்டத்தில் விவசாயிகள் பழனி, சுந்தரவடிவேல், நடராஜ், பத்மனி, காளியம்மாள், சுரேஷ், மாணிக்கம், வேலு, சுமன், சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu