காஞ்சிபுரம் அருகே வீட்டை சூழ்ந்த தண்ணீர்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பத்திரமாக மீட்பு..

காஞ்சிபுரம் அருகே வீட்டை சூழ்ந்த தண்ணீர்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பத்திரமாக மீட்பு..
X

மீட்பு பணியில் தீயணைப்புத் துறையினர்.

காஞ்சிபுரம் அருகே ஆர்பாக்கத்தில் அமைந்துள்ள வீட்டை தண்ணீர் சூழ்ந்ததால் தத்தளித்த மூன்று பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் காஞ்சிபுரத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகளில் நீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளிலே முடங்கி உள்ளனர்.


இந்த நிலையில் வாலாஜாபாத் வட்டம், ஆர்ப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பண்ணை தோட்டத்தில் விவசாய பணி மேற்கொள்ள ஒரு குடும்பத்தினர் அங்கேயே தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆர்ப்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் பல பகுதிகளில் இருந்து நீர் வந்த நிலையில் அவர்களது வீட்டை நீர் சூழ்ந்தது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் ஒரு குடும்பத்தினர் ஆபத்தாக உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் . மாவட்ட தீயணைப்பு அலுவலர் நிஷா பிரியதர்ஷினி அறிவுரையின் பேரில், படகுடன் விரைந்த நிலைய அலுவலர் கார்த்திகேயன் மற்றும் ஜெகதீசன் குழுவினர் பண்ணை வீட்டில் இருந்த இரண்டு பெண்கள், ஓரு ஆண், அவர்களின் வளர்ப்பு நாய் மற்றும் ஆடு உள்ளிட்டவைகளை மீட்டு அவர்களை கவுன்சிலர் பரசுராமனிடம் ஒப்படைத்தனர்.

மேலும், அவர்கள் தற்காலிகமாக தங்க அரசு பள்ளிகளில் இடம் அளிக்கவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. துரிதமாக செயல்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை குழுவினருக்கு அந்தப்பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் சுழ்ந்த பகுதிகள் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தின் மூலம் அவ்வப்போது தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பேரில் அங்கு செல்லும் குழுவினர் உடனடியாக பொதுமக்களை மீட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதந் நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் அனைத்தையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் வருவாய்த் துறைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.

பழையசீவரம் தடுப்பனையில் இருந்து பத்தாயிரம் கன அடி நீர் செல்வதால் கரையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், சிறு சிறு கால்வாய்கள் பாலங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தேவைப்படும் எனில் அந்தப் பகுதி வழியாக செல்ல தடை விதிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கன மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் காஞ்சிபுரம் வட்டத்திற்குள்பட்ட பள்ளிகள் மட்டும் விடுமுறை அளித்த நிலையில் மதியம் 12 மணி முதல் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்திற்கும் அரை நாள் விடுமுறை விடப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பாக தனது வீடுகளுக்கு விரைவாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்