பழையசீவரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..

பழையசீவரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..
X

ராஜகோபுரத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே உள்ள பழையசீவரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் வாலாஜாபாத் அருகேயுள்ள பழையசீவரம்‌ கிராமத்தில், பாலாறு செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் கரையோரம் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில், நரசிம்மர் தனது இடப்புறத்தில் ஸ்ரீ லட்சுமி தேவியை தனது மடியில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.

அந்த வகையில் பழமையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று இன்று காலையில் மகாபூர்ணாபதி தீபாரதனைகள் நடைபெற்றன.

அதன் பிறகு கோயில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கொண்டு ராஜ கோபுரத்திற்கு சென்றதும் புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

கும்பாபிஷேக விழாவில் தமிழக சிறு, குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் அன்பரசன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் கோவிந்ததாஸ் புருசோத்தம்தாஸ், சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, கோயில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், ஸ்ரீதர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, திருக்கோயிலில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கோயில் ஸ்தல வரலாறு:

புகழ்பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு குறித்து ஆன்மிக பெரியார்கள் கூறியதாவது:

முந்தைய காலங்களில் இமயமலையில் உள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத சத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். அந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அந்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது.

வெங்கடாஜலபதி வீற்றிருக்கும் திருமலைக்கு தெற்கிலும், பாடலாத்ரிக்கு மேற்கிலும் இருக்கும் பத்மகிரி என்னும் மலைக்குச் செல், அந்த மலை யட்சர், கின்னரர், கந்தர்வர்களால் வழிபாடு செய்யப்பட்ட பெருமை மிக்கது. அங்கு வழிபட்டால் லட்சுமி நரசிம்மரின் தரிசனம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அத்ரி பத்மகிரியை அடைந்தார். அங்கு கருடாழ்வார் வைகுண்டத்தில் இருந்து கொண்டு வந்த தாமரை மலர் பூத்த குளத்தைக் கண்டார். அதன் கரையில், இருந்த அரசமரத்தடியில் தவத்தில் ஆழ்ந்தார். அவரின் பக்திக்கு மகிழ்ந்த, விஷ்ணு. லட்சுமி தாயாரை மடியில் அமரத்திய கோலத்தில் சாந்த நரசிம்மராக காட்சியளித்தார்.

அதே கோலத்தில் இன்றும் கோயில் கொண்டிருக்கிறார். விஷ்ணு லட்சுமியோடு வாசம் செய்யும் தலம் என்பதால் ஸ்ரீபுரம் எனப்பட்ட இத்தலம் சீவரம் என மாறியது. பழமையான ஊர் என்பதால் பழைய சீவரம் என பிற்காலத்தில் மருவியது. ஸ்ரீ என்றால் லட்சுமி. பிரம்மாண்ட புராணத்தில் இக்கோயில் வரலாற்றில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 300 ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவில் இருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. இங்கு தங்கிய போது. அவரின் கனவில் தோன்றிய பெருமாள். இங்கேயே 48 நாட்கள் தங்கி வழிபாடு செய்தால் நோய் நீங்கும் என அருள்புரிந்தார். அவரும் அதன்படி தங்கி வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். அவருடைய பரம்பரையில் வந்தவர்களே அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருகின்றனர். அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள் மருத்துவமனை செல்லும் முன் இங்கு வந்து தரிசிக்கின்றனர் என ஆன்மிக பெரியோர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!