ஈரோட்டில் கிடங்கில் இருந்து 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் மூட்டைகள் திருட்டு

ஈரோடு மூலப்பட்டறை அருகே உழவன் அண்ட் கோ என்ற மஞ்சள் கிடங்கு உள்ளது. வடிவேல் என்பவருக்கு சொந்தமான இந்த மஞ்சள் கிடங்கில் மொடக்குறிச்சி ,சிவகிரி, ஊஞ்சலூர் போன்ற பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த மஞ்சளை இங்கு இருப்பு வைத்துள்ளனர்.
கிடங்கின் உரிமையாளரான வடிவேலுக்கு உடல்நிலை சரியில்லாததால் கிடங்கினை பராமரிப்பு பராமரிக்க ரவி என்ற மூட்டை தூக்கும் தொழிலாளியை நியமித்துள்ளனர். கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக கிடங்கினை பராமரித்து வந்த ரவி சுமார் ஆறு மாத காலத்திற்கு முன்பு பணியை விட்டு விலகிச் சென்றுள்ளார் .
இதனை தொடர்ந்து விவசாயிகள் தங்களது மஞ்சள் முட்டைகளின் இருப்பு விபரத்தை சரிபார்க்க கிடங்கின் உரிமையாளரான வடிவேலுவை அணுகியுள்ளனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வர இயலாத சூழ்நிலையில் மூட்டை தூக்கும் தொழிலாளி ரவியின் ஒத்துழைப்பும் இல்லாததால் கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று மாற்று சாவியை கொண்டு கிடங்கில் உள்ள மஞ்சள் மூட்டைகளின் இருப்பினை சரிபார்த்தனர்.
அப்பொழுது சுமார் 1200 மஞ்சள் மூட்டைகளுக்கு பதிலாக வெறும் தேங்காய் மட்டைகளை மூட்டைகளாக கட்டி இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுதந்திர ராஜு செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, திருட்டுப் போன மஞ்சள் மூட்டைகளின் மதிப்பு சுமார் 80 லட்சம் இருக்கும். கிடங்கை பராமரிக்க நியமிக்கப்பட்ட ரவி என்பவர் தான் இதனை திருடி சென்றிருக்க வேண்டும் என்றும் காவல்துறை உடனடியாக அவரை கண்டுபிடித்து தங்களது மஞ்சள் மூட்டைகளை மீட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இருப்பு வைத்த மஞ்சள் மூட்டைகள் திருட்டு போன சம்பவம் ஈரோடு மஞ்சள் விவசாயிகளிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu