உலக மக்கள் தொகை தினம்: ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி, வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

உலக மக்கள் தொகை தினம்: ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி, வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

ஈரோட்டில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரசார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (11ம் தேதி) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஈரோட்டில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (11ம் தேதி) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டியதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் நாளை மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளைப் பற்றியும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதின் அவசியத்தைப் பற்றியும் நாட்டு மக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சரியான வயதில் திருமணம் (21 வயதிற்கு மேல்) மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு இடையிலான பிறப்பு இடைவெளி (குறைந்தது மூன்று ஆண்டுகள்) ஆகியன தாய் மற்றும் சேய் நலனில் முக்கிய பங்காற்றுகின்றன என்பன குறித்த விழிப்புணர்வு, இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு மற்றும் கருத்தடை முறைகள் பற்றியும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, இன்று (11ம் தேதி) முதல் ஜூலை 24ம் தேதி வரை அனைத்து வட்டாரங்களிலும் குடும்ப நல முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (11ம் தேதி) நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார். மேலும், உலக மக்கள் தொகை தினத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு குறித்த கையேடு மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர் பயிற்சி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற குடும்ப நல விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் செவிலியர் கல்லூரியை சேர்ந்த மாணவ,மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நவீன வாசக்டமி செய்து கொள்வோம். பெண்களின் சுமையை குறைப்போம், முதல் குழந்தை அவசியம், இரண்டாவது குழந்தை ஆடம்பரம், மூன்றாவது குழந்தை ஆபத்து, ஆணும், பெண்ணும் சமம், ஆண்களே ஏற்பீர் குடும்ப நலம், ஆண் அறுவை சிகிச்சையை ஊக்குவிப்போம், இளம் வயது திருமணத்தை தடுப்போம், பெண்ணுக்கு ஏற்ற திருமண வயது 21 உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இப்பேரணியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி காலிங்கராயன் இல்லம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப் பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர்கள் சோமசுந்தரம் (சுகாதாரப் பணிகள்), கவிதா (குடும்ப நலம்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story