ஈரோட்டில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, விழிப்புணர்வு உறுதிமொழி, பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (11-ம் தேதி) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மக்கள் தொகை முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் விழிப்புணர்வோடு அறிந்துகொள்ளவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும், குடும்ப நல முறைகளையும் தெளிவாய் அறிந்து பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வண்ணம் உலகம் முழுவதும் ஜுலை -11 அன்று உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து இன்றைய உறுதிமொழியான, தினம் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழியான "நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன்.
சிறு குடும்ப நெறி, திருமணத்திற்கேற்ற வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ளவேண்டிய குடும்ப நலமுறைகள், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வேன் உறுதி என அளிக்கிறேன்.
குடும்ப நலத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். என்னுடைய இந்த முயற்சிகள் வெற்றியடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும்" என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் என அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார். மேலும் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற நந்தா செவிலியர் கல்லூரி, திண்டல் வேளாளர் செவிலியர் கல்லூரி, ஜே.கே.கே.எம் சம்பூரணி அம்மாள் செவிலியர் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகை தினத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு குறித்த கையேடு மற்றும் மரக்கன்றுகளை வழங்கி, நடைபெற்ற விழிப்புணர்வு நாடகத்தினை பார்வையிட்டார். மேலும் செவிலியர் பயிற்சி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற குடும்ப நல விழிப்புணர்வு பேரணி மற்றும் ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் நவீன வாசக்டமி செய்து கொள்வோம், பெண்களின் சுமையை குறைப்போம், முதல் குழந்தை அவசியம், இரண்டாவது குழந்தை ஆடம்பரம், மூன்றாவது குழந்தை ஆபத்து, ஆணும், பெண்ணும் சமம், ஆண்களே ஏற்பீர் குடும்ப நலம், ஆண் அறுவை சிகிச்சையை ஊக்குவிப்போம், இளம் வயது திருமணத்தை தடுப்போம், பெண்ணுக்கு ஏற்ற திருமண வயது 21 உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். இப்பேரணியானது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தொடங்கி காலிங்கராயன் இல்லம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி, இணை இயக்குநர் (நலப் பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர்கள் சோமசுந்தரம் (சுகாதாரப்பணிகள்), ராஜசேகர் (குடும்பநலம்), மாநகர நல அலுவலர் பிரகாஷ், உறைவிட மருத்துவ அலுவலர் கவிதா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu