கோபி நகராட்சியில் உலக தண்ணீர், வன நாள் கொண்டாட்டம்
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உலக தண்ணீர், வன நாள் கொண்டாடப்பட்டது.
நவீனமயமாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்படுவதால், வனப்பகுதிகளோடு அவ்வனத்தில் வசித்து வந்த உயிரினங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. வன உயிரினங்களுக்கு நேரிடும் பாதிப்புகள் மற்றும் அழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் சங்கிலியில் மாறுபாடுகள் ஏற்பட்டு இயற்கை பெரிதும் பாதிக்கப்படுவதோடு பருவநிலை மாற்றத்திற்கும் காரணமாக அமைகின்றது. நாளுக்கு நாள் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மார்ச் 21 ஆம் நாள் உலக வன தினம் அதாவது காடுகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
"நீரின்றி அமையாது உலகு “ என்ற வள்ளுவரின் கூற்றினை யாராலும் மறுக்க முடியாது. இந்த பூமியில் வாழும் அத்தனை உயிரினத்திற்கும் நீர் இன்றியமையாத தேவையாக உள்ளது. குறைந்த அளவில் தரையை தோண்டினாலே நிலத்தடி நீர் கிடைத்த காலங்கள் மாறி, இன்று பல அடி ஆழம் தோண்டினாலும் வறண்ட நிலையிலேயே இருக்கிறது நம் பூமி. இது வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை மிகுந்த கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனை அறிந்த உலக நாடுகள் இணைந்து, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி உலக நீர் நாளினைக் கடைப்பிடிக்கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உலக வன நாள் மற்றும் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. நகர் மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் தலைமையில், நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் முன்னிலையில், துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், நகரவை நடுநிலைப்பள்ளி (டவுன்) மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்ற நிகழ்வு தெப்பக்குளம் அருகில் நடைபெற்றது.
விழாவில் நகர் மன்ற உறுப்பினர்கள், பல்வேறு பொது நல சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வையொட்டி, மாணவ மாணவியருக்கு நீர் நிலைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குப்பைகளை தரம் பிடித்து கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் உரையாற்றினார்.
தெப்பக்குளம் பகுதியிலும் நீரோடைகள் அருகிலும் குப்பைகளை கொட்டக் கூடாது என்ற அறிவிப்புகள் 12 இடங்களில் வைக்கப்பட்டது. குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதற்கான மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனி டப்பாக்கள் நகரின் முக்கிய வணிக பகுதிகளில் 35 இடங்களில் வைக்கப்பட்டுள்ளதை நகர் மன்ற தலைவர் மற்றும் கமிஷனர் பார்வையிட்டனர். தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu