ஈரோட்டில் இன்று 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி வழங்கல்
அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஈரோடு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு சோலாரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்குதல், பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள், முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி வைக்கும் விழா இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு சோலாரில் உள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
விழாவுக்கு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி வரவேற்பு ஆற்றுகிறார். தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்குகிறார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலை வகிக்கிறார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், சுமார் 13 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணேசமூர்த்தி (ஈரோடு), ராசா (நீலகிரி), சுப்பராயன் (திருப்பூர்), மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், எம்எல்ஏக்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), வெங்கடாசலம் (அந்தியூர்), டாக்டர் சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். விழா முடிவில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நன்றி கூறுகிறார்.
முன்னதாக, ஈரோட்டில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து காரில் சாலை மார்க்கமாக (புதன்கிழமை) நேற்றிரவு வந்தார். அப்போது, கொடுமுடி சாலைப்புதூரில் ஈரோடு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபோல் அவர் வந்த வழி நெடுகிலும் முக்கிய சந்திப்புகளில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu