கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

Erode news- குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
Erode news, Erode news today- கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (இன்று) தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சியில் 42 அடி உயரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணைக்கு குன்றி, கடம்பூர், மல்லியதுர்கம், விளாங்கோம்பை உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் 10க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக தண்ணீர் வந்தடைகிறது.
கொங்கர்பாளையம், வினோபா நகர், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2,500 ஏக்கர் விளை நிலங்கள் குண்டேரிப்பள்ளம் அணை மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர கோடை காலங்களில் வனப்பகுதிகளில் வாழும் யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இந்த அணையின் தண்ணீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 38.83 அடியாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட இப்பகுதி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன் படி, அணையில் இருந்து இன்று முதல் மே மாதம் 4ம் தேதி வரை தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை மூலம் குண்டேரிப்பள்ளம் அணையில் இன்று காலை பூஜை செய்து பாசனத்திற்காக 2 கரைகளிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இடது கரை வாய்க்காலில் 16 கன அடி , வலது கரை வாய்க்காலில் 8 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று முதல் 12 நாட்களுக்கும், அதைத்தொடர்ந்து 5 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து மீண்டும் 12 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டு மீண்டும் 5 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்படும். இவ்வாறு 10 நாட்கள் என இன்று முதல் மே 4ம் தேதி வரை 44 நாட்களில் 34 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும்.
இதனால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு மகிழ்ச்சி அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu