பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 712 கன அடியாக சரிவு
பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (11ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,649 கன அடியிலிருந்து 712 கன அடியாக சரிந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக இருக்கிறது.
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
நேற்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,649 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (11ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 712 கன அடியாக சரிந்தது.
அணையின் நீர்மட்டம் நேற்று காலை 69.31 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 69.52 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 10.66 டிஎம்சியிலிருந்து 10.75 டிஎம்சியாக அதிகரித்தது.
மேலும், அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu