ஈரோடு மாவட்டத்தில் 19.64 லட்சம் வாக்காளர்கள்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

ஈரோடு மாவட்டத்தில் 19.64 லட்சம் வாக்காளர்கள்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025க்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (29ம் தேதி) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, மொத்தமுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் 19 லட்சத்து 64 ஆயிரத்து 676 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (29ம் தேதி) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, மொத்தமுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் 19 லட்சத்து 64 ஆயிரத்து 676 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2025ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் (31.12.2006 அன்று வரை பிறந்தவர்கள்) விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் மற்றும் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தவும் ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2025-க்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (அக்.29) வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 21,465 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டும், 19,645 வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 19,64,676 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 3.22 சதவீதம் அதிகமாக உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகம், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகம் மற்றும் வாக்குசாவடி மையங்களின் அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 305 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 142 பெண் வாக்காளர்களும், 33 மற்ற வாக்காளர்களும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 258 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 53 ஆயிரத்து 178 பெண் வாக்காளர்களும், 48 மற்ற வாக்காளர்களும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 634 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 167 பெண் வாக்காளர்களும், 12 மற்ற வாக்காளர்களும் உள்ளனர்.

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 331 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 676 பெண் வாக்காளர்களும், 11 மற்ற வாக்காளர்களும், பவானி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 248 வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து‌ 737 பெண் வாக்காளர்களும், 18 மற்ற வாக்காளர்களும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 263 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 436 பெண் வாக்காளர்களும், 26 மற்ற வாக்காளர்களும், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 853 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 33 ஆயிரத்து 443 பெண் வாக்காளர்களும், 12 மற்ற வாக்காளர்களும் உள்ளனர்.

பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 814 ஆண் வாக்காளர்களும். 1 லட்சத்து 35 ஆயிரத்து 010 பெண் வாக்காளர்களும், 21 மற்ற வாக்காளர்களும் என 9 லட்சத்து 50 ஆயிரத்து 706 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 13 ஆயிரத்து 789 பெண் வாக்காளர்களும், 181 மற்ற வாக்காளர்களும் என 19 லட்சத்து 64 ஆயிரத்து 676 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குசாவடி அமைவிடங்களிலும் அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப படிவங்களை இன்று (29ம் தேதி) முதல் அடுத்த மாதம் 28ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

மேலும், சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குசாவடிகளிலும் வருகின்ற நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். 01.01.2025-ம் நாளன்று 18 வயது பூர்த்தியடைந்த (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்துள்ள) நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்கத்திருத்த காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

17 வயது முடிவடைந்த நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்னதாக விண்ணப்பிக்கலாம். ஏப்ரல்-1, ஜூலை-1 மற்றும் அக்டோபர்-1 ஆகிய காலாண்டுகளில் 18 வயது பூர்த்தியடையும் தகுதியுள்ள விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் அந்தந்த காலாண்டுகளில் முதல் மாதத்தில் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் இணைக்க பொதுமக்கள் இணைய வழி முகவரியான www.voters.eci.gov.in என்ற தளம் வாயிலாக மற்றும் Voters helpline App என்ற செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பழுதடைந்த மற்றும் செயல்படாத கட்டிடங்களில் அமையப்பெற்ற வாக்குசாவடிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் (பாகம் எண்-292), பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் (பாகம் எண்-145) என தலா ஒரு வாக்குசாவடி அமைவிடமும் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 15 வாக்குசாவடி அமைவிடங்கள் (பாகம் எண்கள்- 95, 109, 110, 111, 117, 118, 236, 237, 238, 239, 242,243, 244, 247 மற்றும் 248) என ஆக மொத்தம் 17 வாக்குசாவடியின் அமைவிடங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.

இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 959 வாக்குசாவடி அமைவிடங்களில் 2,222 வாக்குசாவடி நிலையங்கள் அமைந்து உள்ளன. வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகம், கோரிக்கைகள் தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ, சம்மந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ அல்லது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-(0424) மூலம் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 63.8 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார் உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள், தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது