விமர்ஷ் 5ஜி ஹேக்கத்தான் ரன்னர்-அப் விருதை வென்ற பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி..!

உதவி பேராசிரியர் ஆர்.பி.கார்த்திக், உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லாவிடம் இருந்து விருது பெறும் போது எடுத்த படம்.
இந்திய அரசின் மத்திய உள்துறை செயலாளரிடமிருந்து விமர்ஷ் 5ஜி ஹேக்கத்தான் ரன்னர்-அப் விருதை ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி வென்றது.
இந்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை, டெலிகாம் சென்டர்ஸ் ஆப் எக்ஸலன்ஸ் இந்தியா, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில், தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் 11 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் கொண்ட 2 அணிகள் கலந்து கொண்டு இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
இவர்கள் ஐ.ஐ.டி. மெட்ராஸ் 5 ஜி டெஸ்ட்பெட் ஆய்வகத்தில் தங்கள் உருவாக்கிய 5 ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமரா குறித்து விளக்கினர். இது போக்குவரத்து மீறல்கள், குற்றவாளிகள் மற்றும் பிற மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை போன்றவற்றை கண்காணிக்க பயன்படுகிறது. இதன் மூலம் வாகனம் மற்றும் அது தொடர்பான பதிவுகளை குறுகிய காலத்தில் எளிதாக கண்டறிய முடியும்.
மேற்கண்ட போட்டியில் ஒட்டுமொத்த அளவில் கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 2வது விருதை பெற்றனர். இந்த விருதை மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, கல்லூரி உதவி பேராசிரியர் ஆர்.பி.கார்த்திக்கிடம் வழங்கினார். விருது பெற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை கல்லூரி தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் வீ.பாலுசாமி ஆகியோர் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu