ஈரோடு மாவட்டத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர், எக்ஸ்-ரே மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் மூலம் நாய்க்கு பரிசோதனை செய்யப்படும் காட்சி (கோப்புப் படம்).
ஈரோடு மாவட்ட கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் மற்றும் எக்ஸ்-ரே கருவிகள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் 106 கால்நடை மருந்தகங்கள், 24 கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் 3 நடமாடும் கால்நடை மருந்தகங்கள் மூலம் கால்நடைகள் மற்றும் சிறு பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம். ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், தடுப்பூசி மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அத்துடன், ஈரோடு கால்நடை பன்முக மருத்துவமனை, கோபி கால்நடை பன்முக மருத்துவமனையில் (விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது) எக்ஸ்-ரே கருவி பயன்பாட்டில் உள்ளது. மேலும், ஈரோடு கால்நடை பன்முக மருத்துவமனை, கோபிசெட்டிபாளையம் கால்நடை பன்முக மருத்துவமனை, மொடக்குறிச்சி கால்நடை மருத்துவமனை, கடம்பூர் கால்நடை மருந்தகம், தாளவாடி கால்நடை மருந்தகங்களில் தற்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் செயல்பாட்டில் உள்ளது.
இதன் மூலம், சிறு பிராணிகளுக்கு எலும்பு முறிவு, எலும்பு / மூட்டு இடமாற்றம் கண்டறிதல், சினை பரிசோதனை, கருவின் வளர்ச்சி கண்டறிதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள கால்நடை நிலையங்களில் உள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் மற்றும் எக்ஸ்-ரே கருவிகளை பயன்படுத்தி தங்கள் கால்நடைகள் மற்றும் சிறு பிராணிகளுக்கு சிகிச்சை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu