அந்தியூர் அருகே நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி மூலம் கால்நடை மருத்துவ முகாம்..!
அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி மூலம் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று (9ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் மைக்கேல் பாளையம் ஊராட்சியில், ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி மூலம் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று (9ம் தேதி) நடைபெற்றது.
இந்த முகாமிற்கு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல் தலைமை வகித்தார். கோபி கோட்ட உதவி இயக்குனர் விஷ்ணுகாந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு இம்மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், கால்நடைகளுக்கு மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதுமாக 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை முதல்வர் துவங்கி வைத்துள்ளார்.
அந்த வகையில் அந்தியூர் வட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி அந்தியூர் கால்நடை மருந்தகத்தினை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்தியூர் வட்டத்தில் நாள் ஒன்றிற்கு இரண்டு கிராமங்கள் வீதம் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, திங்கட்கிழமைகளில் பர்கூர் மலை கிராமங்களான செங்குளம் ஆலெசனபட்டி மலை கிராமங்களிலும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், செவ்வாய்க்கிழமைகளில் தாளக்கரை, கொங்காடை மலை கிராமங்களிலும், புதன்கிழமை மைக்கேல்பாளையம், தோப்புக்காட்டூர் கிராமத்திலும், வியாழக்கிழமை பொய்யான்குட்டை சென்றாயனூர் கிராமங்களிலும், வெள்ளிக்கிழமை புதூர், ஜி.ஜி.நகர் கிராமத்திலும் சனிக்கிழமைகளில் களியங்காடு, எஸ்.பி.கவுண்டனூர் கிராமங்களிலும் கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் பின்னர், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 1962 அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவசர சிகிச்சை பணிகளுக்காக 1962 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும் பொழுது அழைப்பு சென்னை தலைமையகத்தில் பெறப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி உதவி மருத்துவருக்கு தெரிவிக்கப்பட்டு கால்நடை வளர்ப்புப்போரின் இருப்பிடத்திற்கே சென்று கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை வழங்கப்படும்.
மேலும் ,ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 1962 அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை பெற 1962 என்ற இந்த கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நடைபெற்ற முகாமில் கால்நடைகளுக்கான அவசர சிகிச்சை, குடற்புழு நீக்கம் ஆண்மை நீக்கம் ,சினை பரிசோதனை மலடு நீக்க சிகிச்சை செயற்கை முறை கருவூட்டல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu