பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம்; தமிழக அரசுக்கு வி.சி.க., நன்றி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு, திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்த படம்.
பெருந்துறை சிப்காட் பிரச்சினையில், தமிழக அரசின் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் வளாகத்தை சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீரும் நீர் நிலைகளும் மாசடைந்து பொதுமக்கள் கேன்சர், தோல் வியாதி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இது தொடர்பாக கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் வாயிலாக சிப்காட் நிர்வாகத்தை கண்டித்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், சட்டவிரோதமாக கழிவு நீரை வெளியேற்றிய நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இருப்பினும் தமிழக அரசு இப்பிரச்சினை தொடர்பாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக சிப்காட் தொழில் நிறுவனங்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் சிப்காட் தொழில் வளாகத்தில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு, திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெருந்துறை சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்களின் 10 ஆண்டுகால கோரிக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தையும் கவனத்தில் கொண்டு அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் சிப்காட் தொழில் வளாகத்தில் ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றம் அடைய 1996 இல் பின்னலாடை தொழில் வளாகம் கட்டப்பட்டது. இருப்பினும் கடந்த 27 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் முடக்கப்பட்டுள்ளது. தமிழகஅரசு உடனடியாக இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது, ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஜாபர் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாவட்ட பொருளாளர் விஜயபாலன், முன்னாள் மண்டல செயலாளர் சுசிகணேசன், மகளிர் விடுதலை இயக்கம் துர்கா தேவி, ஒன்றிய துணைச் செயலாளர் மா. சந்தோஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu